புதுடெல்லி: பணமோசடி வழக்கில் தொடர்புடைய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து விட்டால் உங்களுக்கும் கிடைக்குமா? என மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் சாட்டர்ஜியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேற்கு வங்கத்தில் கல்வித்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையால் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.இதன் பின்னர் அவர் மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் அவர் வகித்து வந்த பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் தமக்கு ஜாமீன் அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த், உஜ்ஜல் புயான் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் தொடர்புடைய பிறருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்ற ஒரு வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது," என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புவோம்; முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பு..!
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு ஜாமீன் கிடைத்து விட்டால், உங்களுக்கும் ஜாமீன் கிடைத்து விடுமா?," என்று கூறினர். மேலும் இது குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ஜாமீன் பெற்றிருக்கின்றனர் என்பதற்காக சாட்டர்ஜியும் அதே சம உரிமையை எப்படி கோரமுடியும்? நீங்கள் ஒரு ஊழல் நபர் என்ற தொடர்புடைய உண்மைகளை அறிந்திருக்கவில்லையா?," என்று கேள்வி எழுப்பினர்.
அதே நேரத்தில் இந்த விஷயத்தில் ஜாமீன் குறித்து தீர்மானிப்பதற்கு எப்படி இரண்டு இரண்டு ஆண்டுகள் ஆனது என்றும் கேள்வி எழுப்பினர். தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் ஜாமீன் பெற்றார் என்பதற்காக உங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்று நீங்கள் சம உரிமை போன்ற எதையும் கோர முடியாது.
"சாட்டர்ஜி அமைச்சராக பதவி வகித்தவர். இந்த வழக்கில் தொடர்புடைய பிறர் ஜாமீன் பெற்று விட்டனர், ஜாமீன் பெறவில்லை என்பதல்ல. அவர்களுக்கு இணையாக அதே சம உரிமையை அவர் கோர முடியாது. உங்களை ஜாமீனில் விடுவிப்பதால் அது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற ஒரு விஷயத்தை மட்டும நாங்கள் ஆராய வேண்டி உள்ளது. தவிர இது(சிறை தண்டனை) தொடரக்கூடாது என்றும் கருதுகின்றோம். சார்ட்டர்ஜி ஜாமீன் பெற உரிமை படைத்தவர் எனில், ஒரு நாள் தாமதம் என்பதும் அதிகம்தான். நீதிமன்ற விசாரணையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமா?" என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததால் உரிமைகளை சமநிலைப்படுத்துவது அவசியம் என்று நீதிபதி புயன் கூறினார். சாட்டர்ஜி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை பெற்றுத்தருவது குறைந்திருக்கிறது என்றும் நீதிபதிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தனர்.