தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய பாஜக அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா; நாடாளுமன்றத்தில் முழங்கிய கனிமொழி! - Waqf Amendment bill 2024 - WAQF AMENDMENT BILL 2024

MP Kanimozhi comment on waqf board bill: மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவால், சிறுபான்மையினர் இந்த நாடு, மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை இழக்கிறார்கள் என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் திமுக எம்பி கனிமொழி
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் திமுக எம்பி கனிமொழி (Credits - sansad TV)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 6:16 PM IST

டெல்லி: நாடாளுமன்ற மக்கள்வையின் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போது, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இந்த நாடாளுமன்றத்திற்கு நான் புதிதாக வந்தபோது, உறுப்பினர்கள் பலரும் கையில் அரசியலமைப்புச் சட்டத்தின ஒரு நகலைக் கொண்டு வந்தார்கள். அதைக் காப்பாற்ற, பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வந்தார்கள்.

ஆனால், மத்திய அரசு வெளிப்படையாக அரசிலமைப்புக்கு எதிராக நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது அரசியல் அமைப்புக்கு மட்டுமல்லாமல், கூட்டாட்சிக்கும் எதிராக இருக்கிறது, மதம் சார்ந்த சிறுபான்மைக்கும் எதிராக இருக்கிறது, மனிதத்தன்மைக்கு எதிராக இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26 என்ன கூறுகிறது என்றால், ஒவ்வொருவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை இருக்கிறது. மதரீதியான விவகாரங்களை அவர்களே நிர்வாகம் செய்து கொள்ளலாம் என்ற உரிமை கொடுக்கிறது.

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்றால் இஸ்லாமியோரோ, கிறிஸ்தவரோ ஒரு இந்து கோவிலில் உள்ள வாரியத்தில் உறுப்பினராக முடியுமா? அதை நீங்கள் அனுமதிப்பீர்களா? சீக்கியர்களுக்கும் இதே சட்டம் தான், மற்றவர்கள் தலையிட நீங்கள் அனுமதிப்பீர்களா?

குறிப்பிட்ட ஒரு மதத்டதின் மீது நம்பிக்கை இல்லாதவருக்கு, அந்த மதம் சார்ந்த முடிவை எடுக்கும் உரிமையை எப்படி வழங்கலாம். இது அநீதியாக உங்களுக்குத் தோன்றவில்லையா? நீதிக்கு எதிரானதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? சிறுபான்மையினர் தங்கள் நிறுவனங்களை நிர்வகித்துக்கொள்ள உரிமையை வழங்கும் அரசியலமைப்பின் 30வது பிரிவுக்கு நேரடியாக இது எதிராக இருக்கிறது" என்று கனிமொழி ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பல பழைய மசூதிகள் இப்போது ஆபத்தில் தான் இருக்கின்றன. திடீரென்று ஒரு பொதுநல வழக்கு போடப்பட்டு, அங்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகிறார்கள். முன்புயொரு காலத்தில், அது ஒரு கோவிலாக இருந்தது என்று இப்போது கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் தான் வெறுப்பு பிரச்சாரம், பிரிவினை அதிகமாகிறது.

இந்த மசோதா என்பது குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை தாக்குகிறது. அந்த சொத்து யாருடையது என்பதை முடிவு செய்ய வக்ஃப் வாரியத்திற்கு உரிமை இருக்கிறது. இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு, சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரானது. இந்த நாடு, மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை அவர்கள் இழக்கிறார்கள்.

பல மொழிகள், பல மதங்கள், பல இனங்களை சேர்ந்தவர்கள் இங்கு ஒன்றாக வாழலாம் என்று நம்பிக்கையை அவர்கள் இழக்கிறார்கள். இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுக்கு எதிராக இந்த மசோதா இருக்கிறது, நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன்" என்று கனிமொழி பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"வயநாட்டின் வலியை நேரில் பார்த்தேன்" - நாடாளுமன்றத்தில் உருகிய ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details