துவாரகா (குஜராத்): குஜராத் மாநிலம், பேட் துவாரகா தீவு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, இங்கு உள்ள அரபிக்கடலுக்கு அடியில் பண்டைய துவாரகா நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைக் கடலுக்கு அடியில் சென்று மக்கள் பார்க்கும் வண்ணம் ஸ்கூபா டைவிங் நடத்தப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் சுமார் 980 கோடி ரூபாய் செலவில் அரபிக்கடலில் பேட் துவாரகா தீவையும், ஓகாவையும் இணைக்கும் விதமாக 2.32 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலமான 'சுதர்சன சேது'வை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.25) திறந்து வைத்தார்.
அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி பஞ்ச்குய் கடற்கரையில் ஸ்கூபா டைவிங் செய்தார். மேலும், கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகா நகரை பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமானது என தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது X வலைத்தளப் பதிவில், "கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தை பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. மேலும், காலத்தால் அழியாத ஆன்மீக மகத்துவம் கொண்ட பழங்கால சகாப்தத்துடன் இணைந்திருப்பதாக உணர்ந்தேன். மேலும், கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என தெரிவித்திருந்தார்.