தூத்துக்குடி: பஞ்சாயத்து தலைவருக்கான பதவிக்காலம் கடந்த 5-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தங்கள் கிராமத்தில் சிறப்பாக தலைவர் பதவியாற்றி வந்த பாலமேனனுக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி பாராட்டு விழா நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமாரின் 'அய்யாத்துரை' பாடலை ஒலிக்கவிட்டு கிராம மக்கள் நடனமாடி ஊர் தலைவரை பெருமைப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியாகவும், சிரிக்கும்படியாகவும் உள்ளது. மேலும், அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் பஞ்சாயத்தில் தலைவராக பாலமேனன் என்பவர் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலங்களில் 100 நாள் வேலை திட்டம், பண்ணை குட்டை அமைக்கும் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதியுடன் பஞ்சாயத்து தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு, நேற்று (ஜன.15) அப்பகுதி கிராம மக்கள் சார்பில் பொங்கல் விழாவுடன் சேர்த்து பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு விழாவும் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின்போது அப்பகுதி கிராம மக்கள் "அய்யாத்துரை" பாடலை ஒலிக்க வைத்து பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் பாடலுக்கு நடனம் ஆடி தலைவருக்கு பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து பல பாடலுக்கும் நடனம் ஆடி கிராம மக்கள் தங்களின் பஞ்சாயத்து தலைவருக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.