புதுடெல்லி:பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தின் பூர்வாஞ்சல் பகுதியை பூர்வீகமாக கொண்ட டெல்லியின் மூன்று பாஜக எம்எல்ஏக்களில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்ற நிலையில் அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் நாடு திரும்பிய பின், முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இப்போது பிரதமர் மோடி நாடு திரும்பியுள்ள நிலையில் முதலமைச்சரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக வரும் 19 அல்லது 20ஆம் டெல்லி முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு டெல்லியில் வசிக்கும் பீகாரின் பூர்வாஞ்சல் பகுதியை சேர்ந்த வாக்காளர்களின் ஆதரவு பெரும் பங்கு வகித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே பீகாரின் பூர்வாஞ்சல் பகுதியை பூர்வீகமாக கொண்ட ஒரு எம்எல்ஏவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் பீகாரை பீர்வீகமாக கொண்டவருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது சிறந்ததாக இருக்கும் என்ற கருத்தும் பாஜகவுக்குள் எழுந்துள்ளது.
அபய் வர்மா
டெல்லியின் லட்சுமி நகர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக இவர் வெற்றி பெற்றுள்ளார். பீகாரின் தார்பாங்க பகுதியை சேர்ந்தவரான இவர், 12ஆம் வகுப்பு முடிந்த உடன் உயர் கல்வி கற்பதற்காக டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் டெல்லி பார் கவுன்சிலில் பதிவு செய்து வழகறிஞராகப் பணியாற்றி வந்தார். அதன் தொடர்ச்சியாக பாஜக உறுப்பினராகச் சேர்ந்தார்.