டெல்லி: டெல்லி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 08) சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
டெல்லி சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டெல்லி சட்டமன்ற பொதுத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, டெல்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.
மும்முனை போட்டி என்றாலும், சுயேச்சை வேட்பாளர்களை சேர்த்து மொத்தம் 699 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த மொத்தம் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், வாக்களிப்பதற்காக மொத்தம் ஒரு கோடியே 56 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதில், மொத்தம் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.