வயநாடு:கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதில், அப்பகுதியில் உள்ள பல வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்தது. இதற்கிடையே, நேற்று அதிகாலையில், வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும், அந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த பேரிடரில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நேற்று இரவு மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட தேடுதல் பணி, இன்று காலை 6.22 மணிக்கு மீண்டும் துவங்கியது. மீட்புப்படையினர் 4 குழுக்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீட்புப்பணிக்காக அப்பகுதியில் தற்காலிக பாலம் ஒன்றை அமைத்து, சுமார் 150 ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.