புதுடெல்லி:இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசியல் சட்டத்தின் 75ஆவது ஆண்டுநிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது. பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த அரசியல் சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவின் ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் சமத்துவ கட்டமைப்பை வரையறுக்கும் வகையிலான அடிப்படை ஆணவமாக செயலாற்றுகிறது. இந்திய குடியரசு பிறந்ததை குறிக்கும் வகையில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.
நாணயம், அஞ்சல் தலை வெளியீடு:இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆண்டை முன்னிட்டு பழைய நாடாளுமன்றத்தின் மையமண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். இந்த நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் போது பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, "இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளை வடிவமைப்பதில் அரசியலமைப்பு நீடித்து நிலைத்திருக்கும் முக்கியத்துவம் பெறுகிறது,"என்றார்.
இதையும் படிங்க:சென்னைக்கு தெற்கே 940 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக சமஸ்கிருதம், மைதிலி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் புத்தகங்களை குடியரசுத் தலைவர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அரசியல் சட்டம் எனும் ஆவணம் வழிகாட்டும் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் அதன் முகவுரையை குடியரசு தலைவர் வாசித்தார். இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை கெளரவப்படுத்தும் வகையிலும் இந்தியாவின் ஆட்சி மற்றும் சமூக கட்டமைப்பில் அரசியலமைப்பின் நீடித்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் நாணயம், அஞ்சல் தலை ஆகியவற்றையும் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.
பிரதமர் வாழ்த்து:அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு நிகழ்வின் நல்ல தருணத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அரசியலமைப்பு சட்டதினத்தின் வாழ்த்துகள்," என்று கூறியுள்ளார்.
நெறிமுறைகளை காக்க வேண்டும்:இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அரசியலமைப்பு சட்ட தினத்தின் இந்த நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசியலமைப்பு சட்டத்தின் நெறிமுறைகளை மக்கள் காக்க வேண்டும். இந்தியாவின் உள்ளார்ந்த தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது, அது ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டில் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தினை ஏற்றுக் கொண்டதன் 75 ஆவதுஆண்டு இன்று தொடங்குகிறது. இந்த வரலாற்று தருணத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கின்றேன். நமது முன்னோர்களால் மிகவும் சிரமப்பட்டு, கவனமாக உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு நமது தேசத்தின் உயிர்நாடியாகும். இது நமக்கு சமூக, பொருளாதார, அரசியல் ஆகியவற்றுக்கான உத்தரவாத த்தை அளிக்கிறது. இது இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட சோசலிச ஜனநாயகக் குடியரசாக உருவாக்குகிறது. அரசியலமைப்பு அவை மற்றும் அதன் வளமான உறுப்பினர்களின் மகத்தான பங்களிப்பை இன்று நாம் நினைவுகூருகிறோம். அவர்களின் கண்ணோட்டத்துக்கும் ஞானத்திற்கும் நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்,"என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்