நான்தேட்:மகாராஷ்டிராவின் நான்தேட் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக இருந்து வந்தவர் வசந்த் சவான் (69). இவருக்கு நீண்ட காலமாக உடல்நல பிரச்சினை இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வசந்த் சவான் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த அவர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நான்தேட் தொகுதியில் போட்டியிட்ட வசந்த் சவான், பாஜக எம்பி பிரதாப் பாட்டீல் சிக்கலிகரை 59,442 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவின், நான்தேட் மாவட்டத்தில் பிறந்த வசந்த் சவான் நீண்ட காலமாக கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து, 2009 முதல் 2014 வரை நைகான் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும், 2021 முதல் 2023 வரை நான்தேட் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நைகானில் காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“மனைவி வீட்டின் தனி அறையில் தூங்குவது கணவருக்கு வேதனையளிக்கும்” - சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்!