டெல்லி :காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேச நலன் ஆகியவை பலவீனப்படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆட்சியின் கீழ் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி காங்கிரஸ் தாரை வார்த்தது என்ற திகைக்கக் கூடிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது மற்றும் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது என்பதை மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேச நலன் உள்ளிட்டவைகளை பலவீனப்படுத்தி உள்ளதாக பதிவிட்டு உள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த காலங்களில் நடந்த உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதாக பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையால் தங்கள் நிலபரப்பை தாண்டி 25 கிலோ மீட்டர் தூரம் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் இலங்கை பாதுகாப்பு படையால் கைது செய்யப்படும் அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடந்த 1975 ஆம் ஆண்டு வரை கச்சத்தீவு இதியாவின் வசம் இருந்ததாகவும் இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் போடப்படுவதற்கு முன் வரை தமிழக மீனவர்கள் அங்கு சென்று மீன்பிடித்து வந்ததாகவும் தெரிவித்த அவர், ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே தமிழக மீனவர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்டுத் தரக் கோரி தமிழக மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், திமுகவோ அல்லது காங்கிரஸோ இந்தப் பிரச்சினையை எழுப்பவில்லை என்றும் பிரதமர் மோடி நாடு மற்றும் அதன் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் தனது அர்ப்பணிப்பு காரணமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
திடீரென நாட்டில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலே காரணமாகும். கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்ணாமலை எழுப்பிய கேள்விகளுக்கு வழங்கப்பட்டு உள்ள பதிலில், 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவது குறித்து முடிவு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஜவஹர்லால் நேருவும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவது குறித்து முடிவு எடுத்து இருந்ததாகவும் அதன்பின்னரே இந்திரா காந்தி ஆட்சியில் அது தாரை வார்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஆர்டிஐயில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :"மக்களவை தேர்தல் மேட்ச் பிக்சிங் செய்யப் பார்க்கிறார் பிரதமர் மோடி" - ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு! - Delhi India Alliance Rally