டெல்லி :காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் சிந்தாந்தத்தை கொண்டது என பிரதமர் மோடி விமர்சித்ததைக் கண்டித்து, அவர் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "தானும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கேரா, குர்தீப் சப்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மீது இரண்டு புகார்கள் உள்பட 6 புகார்களைக் கொடுத்துள்ளோம்" என்று பதிவிட்டு உள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார்களை வெளியிட்ட ஜெய்ராம் ரமேஷ், அதில், "தேர்தல் வேளையில் அனைத்து கட்சிகளின் சமத்துவத்தை உறுதி செய்வதில் தனது சுதந்திரமான அதிகாரத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. தேர்தல் ஆணையம் அதன் அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்தும் என்று நம்புகிறோம்.
எங்களது தரப்பில் இருந்து நாங்கள் இந்த பாஜக ஆட்சியினை மக்கள் முன் அம்பலப்படுத்த அரசியல், சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வோம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது பாஜகவின் நோக்கம் மற்றும் அந்த பணி முடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.