டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வயநாடு(Wayanad) மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும், இந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 25 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 28 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். நவம்பர் 13 ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.