பாட்னா : பீகார் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 3 பேரும் ஆளும் பாஜக எம்.எல்.ஏக்கள் வரிசையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
பீகாரில் ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்தார். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார்.
இதையடுத்து நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் 129 ஆதரவு வாக்குகளுடன் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். தற்போது பீகார் சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து சில எம்.எல்.ஏக்கள் விலகி பாஜக கூட்டணியில் இணைந்தனர்.
இந்நிலையில், சட்டப் பேரவை கூட்டத் தொடரில் மேலும் 3 காங்கிரஸ், ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள், ஜேடியு - பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் இணைந்து அமர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களும், ஆர்ஜேடியை சேர்ந்த ஒருவரும் தற்போது கட்சித் தாவலில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தார்த் சிங் மற்றும் முனனாள் அமைச்சர் முராரி கவுதம் மற்றும் ஆர்ஜேடி சங்கீத குமார் ஆகியோர் சட்டப் பேரவை கூட்டம் தொடங்கியதும் பாஜக மாநில தலைவர் மற்றும் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி பின்னால் சென்று ஏனைய பாஜக எம்.எல்.ஏக்களுடன் அமர்ந்து கொண்டதாக கூறப்பட்டு உள்ளது.
இரண்டு எம்.எல்.ஏக்களின் கட்சித் தாவலால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 17 ஆக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் கூட்டணி பலம் குறைந்து வருவது சிக்கலை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. வரும் மார்ச் 2ஆம் தேதி பீகார்ல் மெகா ரோட் ஷோவில் பிரதமர் மோடி ஈடுபட உள்ளது மாநிலத்தில் பாஜகவுக்கு கூடுதல் பலத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :"தமிழகத்தில் கடைசியாக நல்லாட்சி கொடுத்தவர் ஜெயலலிதா! எம்ஜிஆருக்கு எதிரான ஆட்சி நடக்கிறது"- பிரதமர் மோடியின் திட்டம் என்ன?