டெல்லி :மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்த அறிவிப்பை ராஜஸ்தான் சட்டமன்ற செயலகம் வெளியிட்டு உள்ளது.
சோனியா காந்தியை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த சுன்னிலால் கராசியா மற்றும் மதன் ரத்தோர் ஆகியோரும் மாநிலங்களவை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான் சட்டமன்ற செயலர் மகாவீர் பிரசாத் சர்மா தெரிவித்து உள்ளார். மாநிலங்களவை உறுப்பினர்கள் மன்மோகன் சிங் (காங்கிரஸ்), பூபேந்திர யாதவ் (பாஜக), ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும், அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏவாக பாஜகவை சேர்ந்த கிரோடி லால் மீனா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து 3 உறுப்பினர்களுக்கான தேர்தலில் சோனியா காந்தி, சுன்னிலால் கராசியா மற்றும் மதன் ரத்தோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவுக்கு 115 உறுப்பினர்களும், காங்கிரஸ்க்கு 70 உறுப்பினர்களும் உள்ளனர். அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடமும், பாஜகவுக்கு 4 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :அமித் ஷா குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு ஜாமீன்!