டெல்லி :அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய புலனாய்வு அமைப்புகள் நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு உள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய புலனாய்வு அமைப்புகள் நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அவற்றின் பாரபட்சமற்ற விசாரணையில் குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமாக செய்லபட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், மக்களிடையே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் கூட்டாட்சி கொள்கைகளை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து போராடுவோம் என்றும் வளர்ந்து வரும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்யவும், நாட்டின் பொருளாதாரத்தின் தன்மையை மேலும் சமமாகவும், நியாயமாகவும், சமத்துவமாகவும் வைத்திருக்க, சொத்து வரி, பரம்பரை வரி மற்றும் அதிகரித்த பெருநிறுவன வரி போன்ற வரிவிதிப்பு நடவடிக்கைகளுடன் நாட்டின் வள ஆதாரத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிமுகப்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.