சென்னை: கடந்த 11 ஆண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சிறை அதிகாரிகளை கேள்வி கேட்டால், அறையில் உள்ள கேமராக்களை அணைத்து விட்டு, தன்னை காவல் துறையினர் கடுமையாக தாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை கைதி போலீஸ் பக்ருதீன் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புனைப்பெயர்கள் இல்லாமல் கைதிகளின் பெயரை ஏன் காவல்துறை பதிவு செய்வது இல்லை? கைதிகளை தொடர் குற்றவாளிகளாக காவலர்கள் தான் உருவாக்குகிறார்கள். புனைப்பெயர்களுக்கு பதிலாக தந்தையின் பெயரை இணைத்து பயன்படுத்தலாம். சிறையில் வைக்கப்படும் புனைப் பெயர்களால், விடுதலைக்கு பின் சிறு தண்டனை செய்த கைதிகள் பெரிய குற்றவாளிகளாக உருவாகின்றனர். கைதிகளை திருத்தும் இடமான சிறைச்சாலை, அவர்களை தீவிர குற்றவாளிகளாக மாற்றும் இடமாக செயல்படுகிறது.
இதையும் படிங்க: நாதக-விற்கு மாநில கட்சி அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தவர் விஜய் தான் - ராஜீவ் காந்தி
இனிமேல் சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் பெயர் முன்னால் உள்ள புனைப் பெயர்களை நீக்குங்கள் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஊழல் தான் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. சாதாரண மக்கள் காவல்நிலையம், தாலுக்கா அலுவலகம் செல்லவே பயப்படுகின்றனர். எல்லா பணிகளுக்கும் ஊழல் வழங்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
அரசு அலுவலகங்களில் ஊழல் இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க முடியுமா? லஞ்சம் வாங்குபவர்களை தவறாக பார்த்த காலம் மாறி, லஞ்சம் வாங்காதவர்களை தவறாக பார்க்கும் காலமாக மாறி விட்டது. சான்றிதழ்கள் பெற ஆன்லைன் வசதிகள் இருந்தாலும், ஆன்லைன் மூலம் வசதிகளையும் பெற முடியாத மக்கள், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தே சான்றிதழ்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளாக விசாரணை நடத்தாமல் கைதியை சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதம். விசாரணை செய்யாமல் சிறையில் வைத்திருப்பவரை விடுதலை செய்ய சட்டம் அனுமதி வழங்குகிறது. பணியில் இருக்கும் போது எண்கவுண்டர் செய்யும் காவல்துறை அதிகாரி, தனது ஓய்வுக்கு பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தால், உடனே இரு காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
டிஜிபி ஏன் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை அனுப்ப அனுமதி வழங்குகிறார். ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் தனியாக பவுன்சர்களை நியமித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 27ம் தேதி ஒத்தி வைத்தனர்.