புதுடெல்லி:இரண்டு நாள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகம் தொடர்பாக 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
அதன் பின்னர் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"பிரதமருடனான சந்திப்பின்போது 3 முக்கிய கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தினேன். இதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே இரண்டாம் கட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு.
அதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து கடந்த 2020ம் ஆண்டு இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை ரூ.18,564 கோடி செலவிடப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படாததால் மத்திய அரசின் நிதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி இந்த நிதியை வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறேன்.
இரண்டாவது, மத்திய அரசு 60 விழுக்காடு நிதியும், மாநில அரசு 40 விழுக்காடு நிதியும் அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டியது ரூ.2152 கோடி. இந்தத் தொகையில் முதல் தவணை இதுவரை வழங்கப்படவில்லை. இத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததே இதற்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. எந்தவொரு மாநிலத்தின் மீதும் மொழி திணிப்பு இருக்காது என தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், அதற்கான ஷரத்து ஒருங்கிணைந்த கல்வித் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இல்லை. எனவே இந்த ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என மத்திய அரசிடம் சொல்லிக்கொண்டு வருகிறோம்.