தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எது 400 இடங்களா? மொத்த சீட்டும் எங்களுக்குத்தான்.. அடித்துச் சொல்லும் ஜார்கண்ட் சிஎம் சம்பய் சோரன்! - CHAMPAI SOREN - CHAMPAI SOREN

CM Champai Soren: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 மக்களவைத் தொகுதிகளிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று அம்மாநில முதலமைச்சர் சம்பய் சோரன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

file pic
சம்பய் சோரன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 5:33 PM IST

சென்னை:இந்தியாவில் வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்டமாக (7வது) 57 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனை அடுத்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், மத்தியில் வெல்லப்போவது இந்தியா கூட்டணியா அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியா என்பதை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது.

மேலும், கடைசி கட்ட வாக்குப்பதிவில் ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்று இடங்களில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில், நாட்டில் தற்போது 'இந்தியா கூட்டணி' அலை வீசி கொண்டிருப்பதாக கூறியுள்ள ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சம்பய் சோரன், மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியுள்ள சம்பய் சோரன், வேலையின்மை, இந்தியா கூட்டணி, பண வீக்கம், சொந்த கட்சியில் இருந்து எழுந்துள்ள சலசலப்பு, கட்சியின் செயல்பாடு மற்றும் 400 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் முழக்கம் ஆகியவை குறித்து பதில் அளித்துள்ளார். அது பற்றி பார்க்கலாம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த முறை என்னென்ன பிரச்சினைகளை மையமாக வைத்து தேர்தலைச் சந்திக்கிறீர்கள்?

இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 'ஒரு பிரச்சினை, ஒரே சிந்தனை' என்ற கோட்பாட்டில் போட்டியிடுகிறது. சாமானியர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் மேம்பாடு போன்ற பிரச்சினைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ள பிரதமர் மோடி எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்த நாட்டு மக்கள் பிரதமரின் தந்திரங்களை புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் நலனுக்காக நாங்கள் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் நாங்கள் ஓட்டு கேட்டு வருகிறோம். இந்தியா கூட்டணியால் மட்டுமே மக்கள் பயனடைவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்தது. பழங்குடியினருக்கோ அல்லது ஏழைகளுக்கோ எந்த விதமான வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதை தவறியதால்தான் பழங்குடியினருக்கான 14 முதல் 27 சதவீத இடஒதுக்கீடு அங்கீகரிக்கப்படாமல் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது என்றார்.

பாஜக பழங்குடியினருக்கு எதிரானது என்றால், மோடியின் அமைச்சரவையில் அர்ஜூன் முண்டா எப்படி மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2021 நவம்பர் 10, 2021 அன்று, நவம்பர் 15ஆம் தேதியை பழங்குடியினரின் பெருமை தினமாக அறிவிக்க ஒப்புதல் அளித்தது. நவம்பர் 15 ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஸ்தாபன நாளாகும். மேலும், பிரிட்டிஷ் காலனித்துவ அமைப்பின் சுரண்டல் முறைக்கு எதிராக வீரத்துடன் போராடி பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்தி, 'உல்குலான்' புரட்சிக்கு அழைப்பு விடுத்த பிரபு பிர்சா முண்டாவின் பிறந்தநாளும் கூட. பாஜக பழங்குடியினருக்கு நட்பு கட்சி என்று கூற முடியாது. உலக பழங்குடியினர் தினத்தன்று பிரதமர் மோடி ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்பது நகைப்புக்குரியது என்றார்.

உங்கள் மாநிலத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தில் இருந்து ஜார்கண்ட் மாநில மக்களுக்கு நிதி வழங்குவதை கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு நிறுத்தியது. இதனால், ‘அபுவா ஆவாஸ் யோஜனா' என்ற திட்டத்தை மாநிலத்தில் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இதன் மூலம் 2026ஆம் ஆண்டுக்குள் வீடற்ற மற்றும் பாழடைந்த வீடுகளில் வசிக்கும் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகளுடன் நிரந்தர வீடுகளை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த திட்டம் ஏழை மக்களுக்கும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தால் பயனடையாதவர்களுக்கும் கொண்டு வரப்படுகிறது. மேலும், ஜார்ஜண்டில் முதன்முறையாக 'சர்வஜன் பென்ஷன் யோஜனா' என்ற திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேலான பயணிகளுக்கு கவுரவ ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

பாஜகவுக்கு எதிரான உங்களது நிலைப்பாட்டுக்கு 'பணவீக்கம்' மற்றும் 'வேலையின்மை' ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கின்றனவா?

கடந்த 10 ஆண்டுகளில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜக எப்போதாவது பேசியிருக்கிறதா? நாட்டில் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கு காங்கிரசை காரணம் காட்டி 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. கேஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.400ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏழைகளுக்கு எதுவும் செய்யாமல் இருந்தும், அவர்கள் எந்த அடிப்படையில் வாக்கு கேட்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன் என்று சம்பய் சோரன் கூறினார்.

வறுமை குறைந்து பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது என்று நினைக்கிறீர்களா?

மத்திய அரசு தற்போது ​​80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி வருகிறதென்பதால், நாட்டில் இருந்து இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. மேலும், சில முதலாளிகளின் நலன்களுக்காக உணவுப் பொருட்களை வழங்கி அரசாங்கம் முன்னேற்றமடைந்துள்ளதே தவிர, வாக்களித்த நாட்டு மக்கள் மீதான தனது பொறுப்பை முற்றிலும் மறந்துவிட்டது என்று சம்பய் சோரன் குற்றம் சாட்டினார்.

மாநில ஊரக வளர்ச்சித் துறையில் முறைகேடு செய்ததான குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அமைச்சர் ஆலம்கீர் ஆலம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்றும், விசாரணையில் அரசின் எந்த தலையீடும் இல்லை என தெரிவித்த முதல்வர் சம்பய் சோரன், ஊழலில் சிக்கியுள்ள மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுவதாக கூறினார்.

கல்பனா சோரன்தான் ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வரா?

''கல்பனா சோரன் முதலமைச்சருக்கு இணையான தலைவராகக் கருதப்படுகிறார்'' என்று கட்சியின் எம்எல்ஏ சுதிவ்ய குமார் சோனு பேசியிருக்கிறார். அதை வைத்துதான் நீங்கள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.. மற்றவர்களின் கருத்துகளுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர்?

இந்த முடிவு இந்தியா கூட்டணியை மட்டுமே சார்ந்துள்ளது என தெரிவித்த முதல்வர் சம்பய் சோரன், இந்த அறிவிப்புக்காக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன், என்றார்.

ஹேமந்த் சோரனை சிறையில் சந்திக்கும்போது அவரிடம் என்ன பேசுவீர்கள்?

ஹேமந்த் சோரன் கட்சியின் செயல் தலைவர். நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், தொகுதி பங்கீடு குறித்தும். கூட்டணியின் கீழ் யாருக்கு சீட் கொடுக்கலாம் என விவாதிப்போம். மேலும், கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்படுவது பற்றியும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று முதல்வர் கூறினார்.

இந்தத் தேர்தலில் 400 இடங்களைத் தாண்டும் என்ற பாஜகவின் முழக்கத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த 400 இடங்களுக்கு பாஜக எந்த அடிப்படையில் உரிமை கோருகிறது என்பது எனக்குப் புரியவில்லை. தங்கள் செயல்பாட்டில் அவ்வளவு நம்பிக்கை இருந்தால், பிரதமர் ஏன் இரவு பகலாக வாக்குகளை பிச்சை எடுக்கிறார்? 2019 ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலின் போது கூட, அவர்கள் 65 இடங்களைத் தாண்டும் என்று கூறி, 25 இடங்களை மட்டுமே பெற முடிந்தது என முதல்வர் சம்பய் சோரன் ஈடிவி பாரத்துக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க:பாஜக - சிவசேனா கூட்டணிக்கு எத்தனை இடங்களில் வெற்றி வாய்ப்பு..? - மகாராஷ்டிரா முதல்வர் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details