ராஞ்சி :பரபரப்பான அரசியக் சூழலுக்கு மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர ஜார்கண்ட் முதலமைச்சர் வேட்பாளர் சம்பை சோரன் இன்று (பிப். 1) மாலை 5.30 மணிக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்க உள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், நில மோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. இறுதியில் கடந்த 20ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜன. 31) விசாரணை நடத்தினர்.
ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஏறத்தாழ 7 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த விசாரணையை அடுத்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.