ராஞ்சி (ஜார்கண்ட்):ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செயல்பட்ட சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவி ஏற்க, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார்.
ஆனால், ஆளுநர் சம்பாய் சோரனை பதவி ஏற்க அழைக்காமல் காலம் தாழ்த்தியதாக விமர்சனம் எழுந்த நிலையில், நேற்று இரவும் சம்பாய் சோரனை முதலமைச்சராக பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததாக ஆளுநரின் முதன்மைச் செயலாளர் அறிவித்தார். இந்நிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் சம்பாய் சோரன் இன்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.
அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற சம்பாய் சோரனை கட்டித் தழுவி ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். சம்பாய் சோரன் பதவி ஏற்பு குறித்து ஜேஎம்எம் கட்சி எம்பி மஹுவா மாஜி, “சம்பாய் சோரன் பதவி ஏற்றது எங்கள் கட்சிக்கு வெற்றியாகும். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிற பாஜகவின் திட்டத்தை இது வீழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.