டெல்லி:ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் ரயிலினுள் இயங்கும் உணவு தயாரிப்பு கூடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாக வைத்துக் கொள்ள தவறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
அவத் அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் உணவு தயாரிப்பு கூடக் கழிவுகளை ஊழியர் ஓடும் ரயிலில் இருந்து கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியதை அடுத்து இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்களில் இயங்கி வரும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் ரயிலின் உள் இயங்கும் உணவு தயாரிப்பு கூடங்கள் தங்களது கழிவுகள் மற்றும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்படி தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சம்பந்தப்பட்ட டிவிசன் அல்லது பிரிவு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
சுத்தமான மற்றும் சுகாதாரமான இருப்பிடத்தை பேண தவறும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 15 ஆயிரம் ருபாய் அபராதம் விதிப்பது மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்திய ரயில்வேயுடன் இணைந்து பயணிகளும், பொது மக்களும் தூய்மையான முறையில் ரயில்களை இயக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் ரயிலுனுள் சுகாதாரமின்மை சூழல் நிலவும் பட்சத்தில் ரயில் மடாத் (Rail Madad) செயலி மூலம் பொது மக்கள் மற்றும் பயணிகள் தங்களது புகார்களை தெரிவிக்குமாறும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ரயில்களில் ஏற்பட்டும் பிரச்சினைகளை தீர்க்க ஆர்பிஎப் மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே இணைந்து சிறப்பு குழு அமைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:டிகே சிவகுமார் சொத்துக்குவிப்பு வழக்கு: செக் வைத்த உச்ச நீதிமன்றம்! அடுத்தது என்ன? - DK Shivakumar