சத்தீஸ்கர்: குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் (MSP) உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைக்களை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகள் அமைப்பின் தலைவர்களுடன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சத்தீஸ்கரில் நேற்று(பிப்.18) 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
இதில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா போன்ற விவசாயிகள் தலைவர்கள், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் கலந்து கொண்டார். 4 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், "இந்த கூட்டத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை செய்த போது ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில், பருப்பு, மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு வாங்குவதற்கு மத்திய அமைச்சர்கள் குழு முன் மொழிந்தது. இது குறித்து விவசாயிகள் தலைவர்கள் தங்கள் மன்றங்களில் ஆலோசித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் எனக் கூறி உள்ளனர்.
மேலும், என்.சி.சி.எஃப்(NCCF) மற்றும் என்.ஏ.எஃப்.இ.டி(NAFED) போன்ற கூட்டுறவு சங்கங்கள் துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, மைசூர் பருப்பு அல்லது மக்காசோளத்தைப் பயிரிடும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர்களின் பயிர்களை MSPயில் வாங்குவோம். வாங்கிய அளவுக்கு வரம்பு இருக்காது. இதற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்படும் என்றார். இது பஞ்சாபின் விவசாயத்தைக் காப்பாற்றும்" என்று கூறினார்.