கவுகாத்தி (அசாம்):காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்தைரை என்னும் பெயரில் இந்தியாவின் தென்கோடி பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி மேற்கொண்டு வருகிறார். ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் தவுபல் பகுதியில் தொடங்கிய இந்த யாத்திரை கடந்த வியாழன் அன்று அசாம் மாநிலத்தில் நுழைந்தது.
ராகுல் காந்தியின் நியாய யாத்திரை அசாமில் நுழைந்ததில் இருந்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை, ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வந்தார். 21ஆம் தேதி யாத்திரை நகோன் மாவட்டத்தில் நுழைந்த போது பாஜகவினர் திரண்டு ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்களை நோக்கி ராகுல் காந்தி பறக்கும் முத்தங்களை அளித்திருந்தார். இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நேற்று அசாம் மாநிலத்தின் முக்கிய நகரான கவுகாத்திக்குள் நுழைய இருந்தது. அப்போது போலீசார் யாத்திரையை கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி, யாத்திரை நகர் வழியாக சென்றால் நெரிசல் ஏற்படும் எனக்கூறி நகருக்கு வெளிப்புறமாக நெடுஞ்சாலை வழியாக செல்லும்படி வலியுறுத்தினர்.
அப்போது காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் பிரமுகர்களும், போலீசாரும் சிறு காயங்கள் அடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “வன்முறையை ஏற்படுத்துதல், ஆத்திரமூட்டுதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், போலீசார் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், கன்ஹையா குமார் உள்ளிட்டோர் மீது 120(B)143/147/188/283/353/332/333/427 IPC R/W Sec. 3 of PDPP Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
டிஜிபி ஜி.பி.சிங்கிற்கு, தடுப்புகளை தகர்க்கும் படி கூட்டத்தை தூண்டியதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யும் படி முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளதாகவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜி.பி.சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று அசாமின் பார்பெட்டா பகுதியில் தனது பயணத்தை துவங்கி உள்ளார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்பி அவர்களில் நிலத்தை பறித்துக் கொள்வதாகவும், அவர் ஊழல் நிறைந்த முதலமைச்சர்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!