சுல்தான்பூர்:கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக மாநில சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாரதிய ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது, ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கட்சித் தலைவர் இருக்கிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்த போது அவர் மீது போலி என்கவுன்டர் வழக்கு பதியப்பட்டது. அதன்பின் போலி என்கவுன்டரில் வழக்கில் இருந்து அமித் ஷாவை சிபிஐ விடுவித்தது. அப்போது பாஜக தலைவராக அமித் ஷா இருந்தார்.
இதை மேற்கொள் காட்டி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து பாஜக நிர்வகி விஜய் மிஸ்ரா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார். நீண்ட நாட்களாக இந்த வழக்கின் மீதான் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வாரண்ட் அனுப்பியது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அமேதி தொகுதியில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தின் இடையே வழக்கு விசாரணைக்கு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இந்நிலையில், இன்று (மே.2) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிபதி பரிந்துரைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணையை மே.14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க:அமேதியில் ராகுல்? ரேபரலியில் பிரியங்கா? காங்கிரஸ் அறிவிப்பு? பாஜகவில் யார்? - Lok Sabha Election 2024