கொல்கத்தா :மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25 ஆயிரத்து 753 ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஏறத்தாழ 24 ஆயிரத்து 640 காலிப் பணியிடங்களுக்கு ஏறக்குறைய 23 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 25 ஆயிரத்து 753 பேருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணை மாநில அரசு வழங்கி உள்ளது. இந்த ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், பலர் பணம் வழங்கி ஆசிரியர் பணி பெற்றதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் டெபாங்சு பசக் மற்றும் எம்.டி.ஷப்பார் ரஷிதி ஆகியோர் அடங்கிய அமரிவில் விசாரணைக்கு வந்தது. கடந்த மார்ச் 20ஆம் தேதி வழக்கின் விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று (ஏப்.22) நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்று உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் ஏறத்தாழ 24 ஆயிரம் ஆசிரியர் பணிகளை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், சட்டவிரோதமாக ஆசிரியர் பணி வாங்கியவர்கள் 4 வார காலத்தில் தங்களது சம்பளத் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதையடுத்து இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பித்தது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையில் 2016ஆம் ஆண்டு அரசு பள்ளிக் கல்வித் துறையால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், 2016ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களின் வினாத் தாள்களை மறுமதிப்பீடு செய்து மீண்டும் 23 லட்சம் பேருக்கு நுழைவுத் தேர்வு நடத்த மேற்கு வங்கம் பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனிடையே ராய்கஞ்ச் பகுதியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க :மாடு மீது மோதுவதை தவிர்க்க முடிவு... சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து -10 போலீசார் உள்பட 36 பயணிகள் படுகாயம்! - Chhattisgarh Bus Accident