தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"பொங்கல் பண்டிகை அன்று சிஏ தேர்வை அறிவித்து தமிழகத்தின் கலாச்சாரம், உணர்வுகளை புறக்கணிக்கும் மத்திய அரசு"- கனிமொழி சாடல் - CA EXAM

2025ஆம் ஆண்டு பொங்கல் அன்று ஜனவரி 14ஆம் சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படுவதை கைவிட்டு வேறு தேதியில் தேர்வு நடத்தும்படி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி (Credits - sansad TV)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 6:39 PM IST

சென்னை:2025ஆம் ஆண்டு பொங்கல் அன்று ஜனவரி 14ஆம் சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படுவதை கைவிட்டு வேறு தேதியில் தேர்வு நடத்தும்படி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தில் கூறியிருப்பதாவது; "2025 ஜனவரி 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் சிஏ தேர்வைப் பொங்கல் பண்டிகை அன்று நடத்தும் முடிவு, தமிழகத்தின் கலாச்சார மரபுகள் மற்றும் மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு புறக்கணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.

பொங்கல் வெறும் பண்டிகை அல்ல; இது தமிழ் பாரம்பரியத்தின் உயிர் நாடியாகும். குடும்பங்கள் ஒன்று கூடி அவர்களின் கலாச்சாரம் மற்றும் விவசாய வாழ்க்கை முறையைக் கொண்டாடும் பண்டிகை தான் பொங்கல். இது போன்ற முக்கியமான தருணத்தில் தேர்வுகளைத் திட்டமிடுவது மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று கூறி விமர்சனங்களைத் திசை திருப்ப பாஜக முயற்சிக்கும் அதே வேளையில், இந்த வாதம் தமிழர்களின் பொங்கல் பண்டிகையின் தனித்துவத்தை அங்கீகரிக்கத் தவறிவிட்டது.

இதையும் படிங்க:"தமிழ்நாட்டில் யாரும் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது" -செல்வப்பெருந்தகை!

தீபாவளி (2024) மற்றும் மக்களவை தேர்தல் (மே 2024) போன்ற காரணங்களுக்காகத் தேர்வுகளை ஒத்திவைத்த அதே ஐசிஏஐ, இப்போது தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகைக்கு இடமளிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒன்றிய அரசின் உணர்வின்மை எடுத்துக்காட்டுகிறது. நமது நாட்டின் பன்முகப் பண்பாட்டுக் கட்டமைப்பில் அரசு காட்டும் அலட்சியம், தமிழ் அடையாளத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

ICAI என்பது பாராளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். ஒன்றிய அரசு மாநில அரசுகளின் மரபுகளை மதித்து, தேர்வுகளை மறு அட்டவணைப்படுத்த ICAI அமைப்புக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, தமிழகத்தின் மீதான அக்கறையின்மையை மேலும் வெளிப்படுத்துவதோடு, அதன் தமிழர் விரோத அணுகுமுறையின் கருத்தை வலுப்படுத்துவதையே காட்டுகிறது,"என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details