புதுடெல்லி:நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
2019–20-ம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டு அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். இதில் 2024-25-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும்.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி 31 ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
"ஜனவரி 31, 2025 அன்று காலை 11:00 மணிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 2025 பிப்ரவரி 1, 2025 அன்று மக்களவையில் சமர்ப்பிக்கப்படும்" என்று நாடாளுமன்ற அலுவலர் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு X இல் பதிவிட்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை ஒன்பது அமர்வுகளைக் கொண்டிருக்கும், அப்போது பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிப்பார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளிப்பார்.
பின்னர் நாடாளுமன்றம் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மார்ச் 10 அன்று மீண்டும் கூடுகிறது. அப்போது அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவும் பட்ஜெட் செயல்முறையை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடையும். முழு பட்ஜெட் கூட்டத்தொடரும் 27 அமர்வுகளைக் கொண்டிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான சலுகை உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்பார்ப்புகள் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகின்றன.