வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் கம்பன் கழகம் சார்பில் ’உலக தாய்மொழி நாள்’ விழா நடைபெற்றது. இந்த விழாவானது வேலூர் கம்பன் கழகத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிலையில் தமிழறிஞர்கள் சோலைநாதன், ஞானவேல், லட்சுமிபதி இளங்கோவன், மருத்துவர் இனியன் சமரசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் இவ்விழாவில் தமிழ் மொழியில் எழுதுவது, பேசுவது உள்ளிட்ட பல போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா மற்றும் செல்வம் ஆகியோர் இணைந்து வழங்கினர். இந்த போட்டியைக் காண மாணவர்கள், ஆசிரியர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா நிறைவடைந்த பின்னர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையில் மாணவர்கள் இந்தியைத் தான் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, நாம் இந்தியை விட்டு விட்டுப் பிற மாநில மொழிகளான மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளை நாம் மாணவர்களுக்கு கற்றுத் தரலாம். எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் நிதியைப் பெற்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதில் என்ன சிரமம்? எனத் தெரியவில்லை.
மத்திய அரசு தரும் நிதியை ஏன்? வாங்காமல் பொய் பேசி, அரசியல் செய்ய வேண்டும். மத்திய அரசின் நிதியை வைத்து அரசுப் பள்ளிகளை சிபிஎஸ்இ தரத்திற்கு மாற்ற முடியும். இந்த திட்டம் மூலம் அனைத்து வசதிகளையும் அரசுப் பள்ளிகள் அடையும். அதுமட்டுமன்றி நாம் கற்கும் தென் இந்திய மொழிகளுக்கு ஆசிரியர்களாகத் தென் இந்திய மொழிகளின் ஆசிரியர்களை வைத்துக் கொள்ளலாம். அதேபோல் பிற மொழி மாணவர்களுக்கு நாம் தமிழ் ஆசிரியர்களை அனுப்பலாம். இதனால், வேலைவாய்ப்பும் கிடைக்கும். இந்த திட்டம் நல்லத் திட்டம்.
தமிழக அரசு மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி தான். இந்தி திணிப்பு எனப் பயம் காட்டி, பொய்யை திணித்து வருகிறது. பெற்றோர்கள் மாணவர்களின் படிப்புக்காகப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், ஏழை, எளிய பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்நிலையில் மத்திய அரசு இது போன்ற திட்டங்களைத் தரும் போது தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் ஒரு போதும் இந்தியை ஆதரிக்க மாட்டேன். ஆனால், இந்த திட்டத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நன்மை நடக்கப் போகிறது என்பதால் இந்த திட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.
இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கை: அரசியல் செய்வது நீங்களா? நாங்களா? - மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாட்டில் சரியான அரசியல் செய்யும் ஆளில்லை. அனைவரும் கூட்டணியில் சேர்ந்த கட்சியோடு, கட்சியாக ஒருமித்த கருத்து கூறுவதில் கவனம் செலுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் தரம் இழந்து இருக்கிறார்கள். ஊழலை மறைக்க, திமுக அரசு இந்தியை வைத்து பூச்சாண்டி காட்டுகிறது.
இந்த திட்டத்தில் இந்தி திணிக்கப்படுகிறது என்பது உண்மை என்றால், என்னை வந்து அடியுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன். மும்மொழிக் கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு ஏதேனும் மூன்று மொழிகளைப் படிக்கச் சொல்கிறது. அதில் இந்தி வேண்டாம் என்றால் நாம் அதை விடுத்து வேறு மொழியை கற்கலாம்.
அந்த அதிகாரம் மாநில அரசு கையில் உள்ளது. ஆனால், அதை மாநில அரசு பொறுப்பேற்று மாணவர்களுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக அரசியல் செய்து வருகிறது. ஏற்கனவே, தமிழ்க அரசின் பள்ளிக் கல்வித் துறை தற்காலிக ஆசிரியர்கள், போதிய மாணவர்கள் இன்மை, நிதிப்பற்றாக்குறை போன்ற பிரச்னைகளில் தவித்து வரும் நிலையில் இந்த திட்டம் மூலம் தமிழக மாணவர்களுக்கு ஏராளமான நன்மைகள் நடக்கும்" எனக் கூறினார்.