மும்பை:நேற்று இரவு, மகாராஷ்டிரா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் கன்பத் கெய்க்வாட், சிவசேனா கட்சியின் (ஷிண்டே) பிரமுகர் மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகேஷ் கெய்க்வாட், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனையடுத்து, பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக, தானேயில் உள்ள உல்ஹான்ஸ்நகரில் இருக்கும் ஹில் லைன் காவல் நிலையத்தில் வைத்து, அக்காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் அனில் ஜெக்தாப் முன்னிலையில், பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் மற்றும் சிவசேனா கட்சியின் ஷிண்டே ஆதரவாளரும், கல்யாண் நகரத் தலைவருமான மகேஷ் கெய்காவாட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட், சிவசேனா பிரமுகர் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மகேஷ் கெய்க்வாட், தானேவில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.