சூரத் :மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 7ஆம் தேதி குஜராத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சூரத் தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் தலால் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அதேபோல் காங்கிரஸ் தரப்பில் நிலேஷ் கும்பனியும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக போட்டியிட சுரேஷ் பத்சலா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். மேலும் பகுஜான் சமாஜ் கட்சி சார்பில் பியாரேலால் பாரதி, 7 சுயேட்சைகள் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்புமனுக்களிலும் போலியாக கையெழுத்திடப்பட்டு உள்ளதாகவும் பிரமான பத்திரத்தில் உண்மைத் தன்மை என்றும் கூறி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ரத்து செய்தார். அதைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ் கட்சி வேட்பாளர் மற்றும் 7 சுயேட்சைகள் என 8 பேரும் இன்று (ஏப்.22) ஒரே நாளில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.