சிவான் / சாரன்: பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மது விலக்கை மீறி கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவான் மற்றும் சாரன் மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 16) நிகழ்ந்த இந்த சோகமான சம்பவத்தில், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவானில் நான்கு பேர் மற்றும் சாரன் மாவட்டம் சாப்ரா நகரில் இரண்டு பேர் உயிரிழந்ததாக நிர்வாகம் உறுதிசெய்துள்ளது. ஆனால், நமக்கு கிடைத்த தகவல்களின்படி, 24 மணிநேரத்தில் குறைந்தது 27 பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு சிறப்பு குழு அமைப்பு:
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சாரன் மாவட்ட நிர்வாகம் சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்துள்ளது. சாரன் மாவட்ட ஆட்சியர் அமன் சமீர், “உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அது வந்த பின்னரே கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும். இறந்தவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது,” என்று கூறினார்.
மேலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறிய அமன் சமீர், மேற்கொள்ளும் விசாரணையில் இன்னும் எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் என்றார். எனவே, விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர் என்று தெரிவித்தார்.
மோசமான நிலையில் பலர்!
இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 49 பேர் கள்ளச்சாராயம் குடித்துக் கடும் உடல்நலக் குறைவுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவானில் 29 பேரும், சாரனில் 10 பேரும் பரிதாப நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒருவரை பீகார் மருத்துவக் கல்லூரிக்கு (PMCH) மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மகார்பூர் கிராமத்தில், பலர் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைபாடுகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 27 பேர் இதுவரை இறந்துள்ளனர். எனினும், அவர்களின் பெயர்களை அரசு இன்னும் வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.