பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மூடும் தருவாய்க்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் சப்ளை 60 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள ஏறத்தாழ 16 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதில் பணியாற்றி வரும் 12 லட்சம் ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவதாக தொழிற்துறை சங்கம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பேசிய பீன்யா தொழிற்சங்க தலைவர் ஆரிப், தொழிற்பேட்டையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கன உலோக தாதுக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அரசு அந்த ஆழ்துளை கிணறுகளை மூடியது.
காவிரி நீரை மட்டுமே தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் நம்பி இருக்கும் நிலையில், தற்போது காவிரி நீர் சப்ளையும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதே சூழல் நிலவினால் தொழிற்பேட்டையில் உள்ள பெருவாரியான நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.