மதுரை: பெண்களுக்கு தருகின்ற மரியாதையை போன்று ஒவ்வொரு பெண் குழந்தைகளையும் நேசிப்பது என்பது சமூகத்தை நேசிப்பதற்கு ஒப்பானதாகும். பெண் குழந்தைகளுக்குத் பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் கடமை எனவும் ஆயி என்ற பூரணம் அம்மாள் பள்ளி மாணவர்களிடையே பேசினார்.
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு' தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி, பள்ளியின் தலைமையாசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதுகலை தாவரவியல் ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மேலும், தனக்குச் சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு வழங்கிய ஆயி என்ற பூரணம் அம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய ஆயி என்ற பூரணம் அம்மாள், "பெண்ணுக்கு அளிக்கின்ற கல்வி சமூகத்தின் மேம்பாட்டிற்கானது. அதேபோன்று ஒரு பெண்ணுக்கு நீங்கள் தருகின்ற மரியாதை, இந்த சமூகத்திற்கே தருகின்ற மரியாதையாகும். பெண்கல்வி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை அறவே தடுப்பது இளைய தலைமுறையினரான மாணவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.
பெண் குழந்தைகளுக்குத் பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். நாம் பிறந்த இந்த சமூகத்தை மாணவர்கள் ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும். அதற்கு உங்களால் இயன்ற கைமாறைச் செய்ய வேண்டும். இரு பாலருக்கும் கல்வி என்பது அடிப்படையானது. நீங்கள் கற்ற கல்வியை இந்த சமூகத்தின் மேன்மைக்காக பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Breaking: பொங்கல் அன்று இருந்த சிஏ தேர்வு "CA Exam" மாற்றம்; ICAI அறிவிப்பு வெளியிட்டது!
மேலும், இந்த நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் குணசுந்தரி, கவுன்சிலர் சிவகுரு சேகர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி மீராதேவி ஆகியோர் வாழ்த்துரையும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் நன்றியுரையும், உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார்கள்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்