பிரயாக்ராஜ்:பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதுல் சுபாஷ் (34) கடந்த திங்கட்கிழமை அன்று அவர் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் வெளியிட்டிருந்த வீடியோ மற்றும் தற்கொலை கடிதத்தில், அவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தார் மீது பல்வேறு குற்றச்சாடடுகளை வைத்திருந்தார்.
அதாவது, சுபாஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு நிகிதா சிங்கானியா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயது மகனும் உள்ளார். ஆனால், மனைவி நிகிதா அவரை விட்டு பிரிந்து நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் இவர் கணவர் அதுல் சுபாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மீது பொய் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை அறிக்கை
அத்துடன், நிகிதா, அதுல் சுபாஷை அவரது மகனைச் சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், நிகிதா சுபாஷிடம் ரூ.30 லட்சம் பணம் கேட்டதோடு, வழக்குகளை திரும்பப்பெற ''3 கோடி ரூபாய் தர வேண்டும், பணம் கொடுக்கவில்லை என்றால் இறந்து விடு'' என்று சொல்லி நீதிமன்ற வளாகத்திலேயே கிண்டல் செய்ததாக சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொய்யான புகார் மற்றும் பெரும் தொகைக்கான கோரிக்கை ஆகியவற்றால் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட அதுல் சுபாஷ், தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.