அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை (ஜன.22) நடைபெறுகிறது. நாளை நண்பகல் 12.20 மணி அளவில் மூலவரான குழந்தை ராமர் சிலை கருவறையில் வைக்கப்படுகிறது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாளைய தினம் மத்திய அரசு அலுவலகத்திற்கு அரைநாள் விடுமுறை மற்றும் உத்தரப் பிரதேசம், புதுச்சேரி, ஹரியானா, மகராஷ்டிரா, அசாம், சண்டிகர், மத்தியப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களுக்கு பொது விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து இன்று (ஜன.21) காலை ரஜினிகாந்த் விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டுச் சென்றார். அதேபோல் நடிகர் தனுஷும் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில், நடிகை கங்கனா ரனாவத் இன்று அயோத்தி சென்றடைந்தார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் அவர் கலந்து கொண்டார். மேலும், சுவாமி ராமபத்ராச்சாரியாரைச் சந்தித்தது குறித்தும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.