டெல்லி:டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், கடந்த சனிக்கிழமை அன்று, இன்னும் இரண்டு நாட்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
அதேநேரம், டெல்லி மக்கள் தன்னை நேர்மையானவர் என சான்றிதழ் வழங்கும் வரை தான் முதல்வராகப் பதவி ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிஷி பெயரை முதல்வர் தேர்வுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார்.
இதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம், அதிஷிக்கு ஆம் ஆத்மி சட்டமன்றக் குழு தலைவராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிஷி டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்கிறார்.