ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநில கலால் வரித் துறையில் காலியாக உள்ள 583 காவலர் பணியிடங்களுக்கான தேர்வை அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்திருந்தது. இத்தேர்வில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர்.
முதல்கட்டமாக அவர்களுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வின் ஒரு பகுதியாக ஓட்டப் பந்தய தேர்வு நடைபெற்றது. தலைநகர் ராஞ்சிக்கு உட்பட்ட ஸ்மார்ட் சிட்டி மற்றும் டெண்டர்கிராம், கிரிதிஹ்கில் உள்ள காவலர் மையம், சியாகி விமான நிலையம் ( பலாமு), ஜே.ஏ.பி.டி.எஸ். பத்மா ( ஹசாரிபாக்), சி.டி.சி. (ஷாம்செட்பூர்), முசாபானி, சாஹிப்கஞ்ச் ஆகிய ஏழு இடங்களில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஓட்டப் பந்தயம் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இத்தேர்வில் பங்கேற்றவர்களில் இதுவரை 12 இளைஞர்கள் திடீரென இறந்துள்ளது போட்டியாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகபட்சமாக, பலாமு மாவட்டத்தில் நடைபெற்ற ஓட்டப் பந்தய தேர்வில் பங்கேற்றவர்களில் 70-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மயக்கம் அடைந்ததுடன், அவர்களில் 5 பேர் இறந்துள்ளதும் ஈடிவி பாரத்தின் கள ஆய்வில் தெரிய வந்தது. இதேபோன்று சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்றவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் மைதானத்தில் மயங்கி விழுந்ததுடன், அவர்களில் இரண்டு பேர் இறந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.