திருவணந்தபுரம்: முன்னாள் கேரள விளையாட்டு கவுன்சிலின் தலைவர் பத்மினி தாமஸ், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே சமயம், அனைத்து கட்சிகளும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த பட்டியலை விரைவில் வெளியிடவும் உள்ளது. இந்த நிலையில், முன்னாள் வீராங்கனையும், முன்னாள் கேரள விளையாட்டு வாரியத்தின் தலைவருமான பத்மினி தாமஸ் மற்றும் திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலரும், டிசிசி முன்னாள் பொதுச் செயலாளருமான தம்பனூர் சதீஷ் ஆகியோர் இன்று (மார்ச் 14) பாஜகவில் இணைந்துள்ளனர்.
திருவணந்தபுரத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்வில் அவர் பங்கேற்றார். அப்போது கேரள பாஜக தலைவர் கே.சுரேந்தர் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பத்மினி தாமஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.