புலிவெந்தலு :மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேச சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் புலிவெந்தலு தொகுதியில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். ஜெகன் மோகன் சார்பில் புலிவெந்தலு நாகராட்சி துணை தலைவர் ஒய்எஸ் மனோகர் ரெட்டி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்தலு தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கடந்த 2022 -23 நிதி ஆண்டின் வருவாயாக 57 கோடியே 75 லட்ச ரூபாய் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக அவரது சொத்து மதிப்பு 529 கோடியே 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கலின் போது பிரமாண பத்திரத்தில் 375 கோடியே 20 லட்ச ரூபாயை மொத்த சொத்து மதிப்பாக ஜெகன் மோகன் ரெட்டி கணக்கு காட்டி இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 41 சதவீதம் அதிகரித்து உள்ளது.
மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். ஒய்எஸ் மனோகர் ரெட்டி, புலிவெந்தலு மேயர் வரப்பிரசாத ரெட்டி ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது வழங்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் தான் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு தெரியவந்து உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய பிரமாண பத்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி பாரதி ரெட்டிக்கு அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் என ஒட்டுமொத்த 176 கோடியே 30 லட்ச ரூபாய் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாரதி ரெட்டி 6.4 கிலோ எடையிலான தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை வைத்து இருப்பதாகவும் அதன் மதிப்பு 5 கோடியே 30 லட்ச ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவி பாரதி ரெட்டியின் பெரும்பாலான சொத்துகள் பாரதி சிமென்ட்ஸ், சரஸ்வதி சிமென்ட்ஸ், சந்தூர் பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளில் இருந்து கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏப்ரல் 25ஆம் தேதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றொரு வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 810 கோடியே 42 லட்ச ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பும் 41 சதவீதம் அதிகரித்து உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குடும்ப நிறுவனமான ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடட் நிறுவனத்தில் இருந்து பெருவாரியான சொத்துகள் கிடைக்கப்பெற்று உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷின் சொத்து மதிப்பு 542 கோடியே 7 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் மங்களகிரியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம் லாவண்யாவைத்து நரா லோகேஷ் களம் காணுகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு தனது குடும்ப சொத்தாக 373 கோடியே 63 லட்ச ரூபாயை நரா லோகேஷ் தனது வேட்பு மனுவில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :தெலங்கானாவில் கட்டுமான பணியில் இருந்த பாலம் இடிந்து விபத்து! யார் காரணம்? - Telangana Bridge Collapse