திருப்பதி:திருப்பதி லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திரப் பிரதேச அரசு, சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு இணங்க, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்தது தொடர்பாக விரிவான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பது அவசியம் என ஆந்திரப் பிரதேச அரசு கருதுகிறது. அதன்படி, குண்டூர் ரேஞ்ச் ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
விசாகாப்பட்டினம் சரக டிஐஜி- கோபிநாத் ஜெட்டி, ஒய்எஸ்ஆர் மாவட்ட எஸ்பி- ஹர்ஷ்வர்தன் ராஜு, திருப்பதி கூடுதல் எஸ்பி (நிர்வாகம்) வெங்கட ராவ், டிஎஸ்பி-க்கள் ஜி.சீதாராம ராவ், சிவநாராயண சுவாமி, அன்னமையா மாவட்ட இன்ஸ்பெக்டர் (எஸ்பி) டி.சத்திய நாராயணா, என்டிஆர் மாவட்ட போலீஸ் கமிஷனர் கே.உமாமகேஷ்வர், சித்தூர் மாவட்டம் கல்லூர் சி.ஐ. எம்.சூர்யநாராயணா ஆகியோர் விசாரணைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பள்ளியின் வளர்ச்சிக்காக 11 வயது சிறுவன் நர பலி; உ.பி.யில் தான் இந்தக் கொடுமை!
சிறப்பு விசாரணைக்குழு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "விசாரணையின்போது அரசின் எந்தத் துறையிலிருந்தும் தொடர்புடைய தகவல் மற்றும் உதவியை சிறப்பு விசாரணைக்குழுவினர் பெறலாம். அனைத்து அரசுத் துறைகளும் சிறப்பு விசாரணைக் குழு அதன் கடமைகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும் அவர்கள் கோரும் எந்தவொரு தகவல் அல்லது தொழில்நுட்ப உதவியையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சிறப்பு விசாரணைக் குழுவினர் தங்களுக்கு ஏதேனும் வெளி நபர்களின் உதவி தேவைப்பட்டால் காவல் துறை டிஜிபி-யிடம் கேட்டுப் பெறலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தெலுங்கு தேசம் எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "முன்னாள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலைக் கூட விட்டு வைக்கவில்லை. இவர்களின் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் தரமற்றது மற்றும் விலங்கு கொழுப்புகள் கலப்படம் செய்யப்பட்டது" என குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 22ம் தேதி அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பின் விசாரணை போதாது என்றும், உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணை வேண்டும் எனவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்