டெல்லி: கேரளாவில் பெய்த கனமழையால் வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் அவ்வப்போது இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரளாவை உலுக்கியுள்ள இந்த இயற்கை பேரிடர் குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் இதுகுறித்து பதிலளித்த அமித் ஷா, “கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர் குறித்து ஜூலை 23ஆம் தேதியே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அதே நாளில் ஒன்பது தேசிய பேரிடர் குழுவினரை கேரளாவுக்கு அனுப்பி வைத்தோம். இருப்பினும், கேரள அரசு முன்னெச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை அனுப்பப்பட்டும்கூட எச்சரிக்கையாக இருக்கவில்லை.
மத்திய அரசின் முன்னெச்சரிக்கையையும், இந்த துயரத்திற்கான நடவடிக்கையையும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ஜூலை 30 அன்று நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே மாநிலத்திற்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜூலை 24 அன்று மற்றொரு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று 9 மீட்புப் படைகள் அனுப்பப்பட்டன. ஜூலை 30 அன்று மேலும் மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டன.