புரி:திருப்பதி கோயில் லட்டு தயாரிக்கப்படும் மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலில் பயன்படுத்தப்படும் நெய்யின் தரத்தைச் சோதிக்க புரி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக புரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஷங்கர் ஸ்வைன் கூறுகையில், "புரி ஜெகந்நாதர் கோயிலில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை. எனினும் சந்தேகம் வராமல் இருக்க, அதன் தரத்தைப் பரிசோதிக்க மாவட்ட நிர்வாகம் விரும்புகிறது.
கோயிலில் பயன்படுத்தப்படும் நெய்க்கான தர நிலை தொடர்பாக மாநிலத்தின் மிகப்பெரிய பால் கூட்டமைப்பான அரசுக்குச் சொந்தமான ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புடன் (ஓம்ஃபெட்) ஆலோசிக்க உள்ளோம். கோயில் மடப்பள்ளியில் பயன்படுத்தப்படும் நெய் மற்றும் பிற மூலப்பொருட்களை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.