ஹைதராபாத்: கலை இயக்குநர் நிதிஷ் ராய் இந்தியாவின் தற்போதைய சமூக அரசியல் குறித்து எதிரொலிக்கும் டிஜிட்டல் கலைப்படைப்புகளை காட்சி படுத்தியுள்ளார். ராமோஜி திரைப்பட நகரத்தை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட மாற்றம் நினைவு கூறத்தக்கதாகும்.
தனிச்சிறப்பு வாய்ந்த கலை இயக்குநர் நிதிஷ் ராய், டிஜிட்டல் கலைப்படப்புகளை காட்சி படுத்தியுள்ளார். அவரது கலைப்படைப்புகள் கொல்கத்தாவில் உள்ள அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் சவுத்கேலரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது ராயின் வளர்ந்து வரும் கலை வெளிப்பாட்டின் ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது, திரைப்படங்களில் அவரது புகழ்பெற்ற படைப்புகள் அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கின. குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் திரைப்படமான கிளாடியேட்டர் எனும் படத்தில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
புகழ்பெற்ற திரைப்பட கலை இயக்குநராக அறியப்பட்ட ராய், தமது டிஜிட்டல் கலைப்படைப்புக்கான பயணத்தை ஒரு ஆண்டுக்கு முன்புதான் தொடங்கினார். இந்த மாற்றம் குறித்து உணர்வுப்பூர்வமாக அவர் பேசினார். ராயின் மகன் அவரது தந்தையின் கலை திறனை அறிந்து அவருக்கு டிஜிட்டல் கலைப்படைப்புக்கான தேவையான டிஜிட்டல் கருவிகளை வழங்கினார். "டிஜிட்டல் கலையை கற்க தொடங்கினேன். இந்த வழியிலான கலைப்படைப்புகளை மக்கள் எப்படி அணுகுகின்றனர் என்பதை கண்டேன். பெரும்பாலானோர் வெறுமனே நகல் எடுத்து அதனை அப்படியே வரைவதில் கவனம் செலுத்தினர். வெகு சிலர் மட்டுமே பாரம்பரியமான கலைப்படைப்புகளில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுகின்றனர். நானும் அந்த திசையை நோக்கி மாறுவதை தேர்ந்தெடுத்தேன்,"என்றார் ராய்
இந்தியாவில் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையை எதிரொலிக்கும் வகையிலான அவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாம் வாழும் காலத்தை பிரதிபலிக்கும் கடமை கலைஞர்களுக்கு உண்டு என்று ராய் கூறினார். சமூக எழுச்சி மற்றும் அமைதியின்மை மீதான கவனம், அவரது நுணுக்கமான படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது, இது அவரைச் சுற்றியுள்ள உலகத்துடனான அவரது ஈடுபாட்டைக் குறிக்கிறது.
ராமோஜி திரைப்பட நகரம் உருவாக்கம்: ராயின் கலைப்பயணத்தின் சிறப்பம்சங்களை குறிப்பிடும் நிலையில் அவரின் இன்னொரு சிறப்பான பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக ராமோஜி திரைப்பட நகரம் உருவாக்கம் திகழ்கிறது. உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரை கட்டமைத்ததன் பின்னணியில் ராமோஜி ராவ் அவர்களின் கனவை நனவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்ததை நினைவு கூர்கிறார். மறைந்த ஊடக அதிபர் ராமோஜி ராவ் பற்றி அன்புடன் குறிப்பிடும் ராய், ஒரு திரைப்பட நகரை உருவாக்கும் யோசனையுடன் முதலில் ராமோஜி ராவ் தம்மை அணுகியது குறித்தும் நினைவு கூர்கிறார். "ராமோஜி ராவ் அவர்கள் அபாரமான விருந்தோம்பல் மிக்கவராக, தமது கண்ணோட்டத்துடன் ஆழ்ந்த பிணைப்பையும் கொண்டிருந்தார். ஒரு பெரிய திரைப்பட நகரை கட்டமைக்கும் பணியில் மற்றும் அவரது கண்ணோட்டத்தில் ஆழமாக இணைந்திருந்தார். நான் அதனை ஏற்றுக் கொண்டேன். ஏழு ஆண்டுகளாக இந்த திட்டத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டேன்,"என்றார்.
ராமோஜி திரைப்படநகருக்கான ஆழ்ந்த பணியில் ஏழு ஆண்டுகள் ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக 2000 ஏக்கரில் அமைந்த இந்த அதிசயம், இன்று இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையின் அடித்தளமாக உள்ளது. ராயின் உன்னிப்பான கவனம் , எடுத்துக் கொண்ட பணியை முடிக்கும் திறன் மற்றும் ஆக்கப்பூர்வமான உள்ளீடு ஆகியவை திரைப்பட நகரத்தை உலகளாவிய அதிசயமாக வடிவமைக்க வழி வகுத்தது. அவரது பங்களிப்பு என்பது கட்டமைப்புக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அவர் ஒரு வங்க மொழி தொலைகாட்சியைத் தொடங்கவும் பரிந்துரைத்தார், அது இறுதியில் அவர் பரிந்துரைத்தபடி ஈடிவி வங்காளம் என்ற பெயர் பெற்றது. "ஈடிவி தெலுங்கு தொலைகாட்சி என்பது போல கீதாஞ்சலி என்பதற்கு பதில் ஈடிவி வங்காளம் என்ற பெயரை நான் அவரிடம் (ராமோஜி ராவ்)கூறினேன். அவர் ஏற்றுக் கொண்டார்,"என்றார் ராய்
நிதிஷ் ராயின் சினிமா பயணம் என்பது மிருணாள் சென்னின் காரிஜ் என்ற படத்தின் மூலம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து எண்ணற்ற இந்தி, வங்க மொழி திரைப்படங்களில் பணியாற்றினார். தவிர கடந்த பல ஆண்டுகளாக அவர் ஆடை வடிவமைப்பு மற்றும் திரைப்பட இயக்கத்திலும் செயல்பட்டார். ஜமாய் நம்பர் ஒன், புத்தபூதும், கோன்சாய்பாகனர் பூட். ஆகியவை அவர் இயக்குநராகப் பணியாற்றிய சில படங்களாகும். ஆனால், கிளாடியேட்டர் போன்ற படங்களில் அவரது விதிவிலக்கான தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் கலை இயக்கம் அவரை சர்வதேச புகழுக்கு உயர்த்தியது.
தமது கலைப் பணியை வடிவமைத்தவர்களில் மிருணாள் சென் மற்றும் ஷ்யாம் பெனகலின் மகத்தான பங்களிப்பை ராய் ஒப்புக்கொள்கிறார். ஒரு கலைஞராக அவரது பரிணாம வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது, "ஷியாம் பெனகல் என்னுடைய வழிகாட்டியாவார். அவர் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வாயிலாக எனக்கு அவர் அதிகம் கற்றுக் கொடுத்தார்,"என்றார் ராய். திரப்படம், கலை எனும் பாரம்பரிய உலகத்தில் ராய் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஆழமாக தடம் பதி்ததிருக்கிறார். தவிர, நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் தேவை குறித்தும் அவர் அங்கீகரித்திருக்கிறார். "செயற்கை நுண்ணறிவு யுகம் வந்து விட்டது. டிஜிட்டல் கலைப்படைப்புகளுக்கே எதிர்காலம் உள்ளது. நாம் அதனை மேற்கொள்ளாவிட்டால், நாம் பின்னடவை சந்திக்க நேரிடும்,"என்று எச்சரிக்கிறார்.
கலைத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்திருப்பதை ராய் முழுவதும் உணர்ந்தே இருக்கிறார். மாறிவரும் உலகில் தொடர்புடையதாக இருக்க வேண்டும் எனில், வருகின்ற அடுத்த தலைமுறை கலைஞர்கள் டிஜிட்டல் கலை கருவிகளில் தேர்ச்சி பெறுமாறு அவர் வலியுறுத்துகிறார். சினிமா மற்றும் டிஜிட்டல் கலையில் அவரது பணி விரிவானதாக இருந்தாலும், அவர் இப்போது குழந்தைகளுக்கான திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டுள்ளார். வங்காள மொழிப் படங்களுக்கு வலுவான விநியோக கட்டமைப்புகள் இல்லாததை அவர் ஏற்றுக் கொள்கிறார். "வங்க மொழி படங்களுக்காக மிக சில விநியோகஸ்தர்களே உள்னர். குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகளை கவரும் வகையில் திரைப்படங்களை உருவாக்க விரும்புகிறேன்,"என்கிறார்.