ஸ்ரீஹரிகோட்டா: ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி விண்கலங்களுடன் பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் இன்றிரவு 10 மணியளவில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்( இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளியில் நிறுவன இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகளை இஸ்ரோ தற்போது துவங்கி உள்ளது.
இதற்காக, ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி விண்கலங்களை தனியார் பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. தலா 220 கிலோ எடை கொண்ட இவ்விரு விண்கலங்களையும் சுமந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் இன்றிரவு 9.58 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இவற்றுடன் மேலும் 24 பேலோடுகளுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் வெவ்வேறு சுற்றுவட்ட பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணி விரைவில் நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் சாதனையை படைத்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.