டெல்லி : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு விஐபி பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில் கூறிய நிலையில், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கி மத்திய உத்தரவிட்டுள்ளது.