ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"உண்மைகளை திரித்து கூறும் காங்கிரஸ்"-அம்பேத்கர் விமர்சனம் குறித்து அமித்ஷா விளக்கம்! - AMBEDKAR ROW

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் .காங்கிரஸ் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாக குற்றம் சாட்டினார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Image credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2024, 7:25 PM IST

புதுடெல்லி:அம்பேத்கர் குறித்து 17ஆம் தேதி மாநிலங்களவையில் கூறியதன் எதிரொலியாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜூ ஆகியோர் சூழ டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,"நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளை திரித்துக்கூறும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கருக்கு எதிரானதாக, இட ஒதுக்கீடுக்கு எதிரானதாக, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான கட்சியாக இருக்கிறது.

இதுதவிர காங்கிரஸ் சாவர்க்கரை அவமதிக்கிறது. அரசியமைப்பு சட்டத்தின் கொள்கைகளை காங்கிரஸ் படிப்படியாக அழித்து வருகிறது. பல ஆண்டுகளாக பெண்களுக்கான இட ஒதுக்கீடை ஓரங்கட்டியது. நீதித்துறையை, ராணுவ தியாகிகளை அவமதிக்கிறது. நாட்டின் நிலத்தை வெளிநாடுகளுக்கு கொடுத்தது,"என்று கூறினார்.

இதையும் படிங்க:"அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும்"-எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வலியுறுத்தல்!

அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்,"என்று கூறியிருந்தார்.

அமித்ஷா அம்பேத்கரை அவமதித்து விட்டதாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டன. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தாழ்த்தப்பட்டோரின் அடையாளமாகத் திகழும் பி.ஆர்.அம்பேத்கரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா மனிப்புக் கேட்பதுடன், பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தவறான செயல்களை மறைக்க தீங்கிழைக்கும் பொய்களை காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது," என்று குற்றம் சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details