டெல்லி:மைக்ரோசாப்ட் மென்பொருள் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் வங்கிகள், விமான சேவை, பங்கு சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட விமானங்களும், இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் 365 மென்பொருளை விமான நிறுவனங்கள், வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஏராளமானோர் பயன்படுத்தி வருவதால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விமான நிலையங்களில் விமான சேவைகளில் கடும் பாதிப்புக்குள்ளாகின. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா போன்ற விமான நிறுவனங்களின் சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டது இதனால் விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இந்தியாவில் இண்டிகோ உள்பட பல நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன. பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். விமான புக்கிங்கை வேறு நாளுக்கு மாற்றி தர விமான நிறுவனங்கள் முன் வந்தது. பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு முழு பணமும் தரப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.