டெல்லி:பார்படாசில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தாயகம் திரும்ப தயாராக இருந்த நிலையில், திடீரென அந்நாட்டை பெரில் புயல் தாக்கியது. பெரில் புயல் காரணமாக பார்படாசில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சூறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் பார்படாசில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மூன்று நாட்கள் அங்குள்ள உள்ள விடுதிகளில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், பிசிசிஐயின் ஏற்பாட்டின் பெயரில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டு அங்கிருந்து பார்படோஸ் சென்று இந்திய வீரர்களை டெல்லி அழைத்து வந்தது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவர்க் நகருக்கு சென்ற விமானம் ஜூன் 30ஆம் தேதி மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில், விமான சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் மறு உத்தரவு வரும் வரை காத்திருக்கும்படியும் விமான ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக நெவர்க்கில் இருந்து விமானம் பார்படோஸ்க்கு புறப்பட்டு சென்று அங்கு சிக்கியுள்ள இந்திய அணி வீரர்களை மீட்டு டெல்லி அழைத்து வரும் படி விமான ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத நிலையில் விமான ஊழியர்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.
வழக்கமான பயணத்திற்காக காத்திருந்த விமான ஊழியர்களுக்கு இந்திய அணியை அழைத்து வரும் பொறுப்பு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் ஒவ்வொருவரது முகத்தில் ஆனந்த புன்னகை தாண்டவம் ஆடத் தொடங்கியது. இது குறித்து பேசிய விமான நிறுவன ஊழியர், விமானத்தின் கமாண்டர் எங்களிடம் வழக்கமான விமான சேவை ரத்து செய்யப்பட்டு பார்படோஸ்க்கு செல்ல உள்ளதாக அறிவித்தார்.
பார்படோஸ்க்கு ஏர் இந்தியா விமானம் இதுவரை சென்றதில்லை என்பதால் குழப்பமடைந்தோம். பின்னர் அங்கு சென்ற போது இந்திய வீரர்களை அழைத்து வருவதற்காக விமானம் திருப்பி விடப்பட்டது என்பதை அறிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம் என்றார். சூறாவளி புயலால் சிக்கிக் கொண்ட இந்திய வீரர்களை விமானத்தில் ஏற்றிக் கொண்டு அவர்களோடு ஒன்றாக பயணித்தது மகிழ்ச்சியை அளித்ததாக அவர் கூறினார்.
தொடர்ந்து விமானத்தின் கேப்டன் ஹேமந்த் கோட்கே கூறுகையில், திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டு காத்திருக்கும் படி கூறியதால் சந்தேகத்திற்கு ஆளானோம். ஏறத்தாழ 16 மணி நேரம் நெவர்க் நகரில் நாங்கள் காத்திருந்தோம், பின்னர் பார்படோஸ்க்கு விமானம் திருப்பி விடப்பட்டு அங்கு புயலால் சிக்கிக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களை திரும்ப அழைத்து வந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய வீரர்களுடன் குழு உறுப்பினர்கள் 14 பேரும் பயணித்தது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ரசிகர்களுக்கு முன்னதாக இந்திய வீரர்களுடன் புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப் பெறும் வாய்ப்பு எங்களுக்கு முதலில் கிடைத்தது என்று கூறினார். இதனிடையே திடீரென நெவர்க் - டெல்லி பயணத்தை ரத்து செய்ய என்ன காரணம் என விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க:உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு! - PM Modi Meet Indan team