ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் பாஜக சிறுபான்மையின மோர்ச்ச மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர் உஸ்மான் கனி. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முகமது கனி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்களை மீறியதாக 6 ஆண்டுகளுக்கு முகமது கனியை கட்சியில் இருந்து நீக்குதாக பாஜக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஒன்கர் சிங் லகாவாத் தெரிவித்தார்.
இந்நிலையில், பிகானீரில் போலீசாரால் முகமது கனி கைது செய்யப்பட்டார். முக்தா பிரசாத் நகர் பகுதியில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த முகமது கனியின் காரை வழிமறித்து சோதனையில் ஈடுபட முயன்றதாகவும் அதற்கு முகமது கனி அனுமதிக்காமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து முகமது கனியை கைது செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் விடுதலைக்காக மாவட்ட கூடுதல் நீதிபதியிடம் முகமது கனி ஆஜர்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்ததற்காக கட்சியில் இருந்து முகமது கனி நீக்கப்பட்ட நிலையில், தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.