ஹைதராபாத்:சூரியன் குறித்து ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) விண்வெளி மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்தியா சார்பில் இஸ்ரோவும் (ISRO) இந்த ஆய்வு களத்தில் இறங்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2023 செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இது 125 நாட்கள் பயணித்து, கடந்த ஜனவரி மாதம் சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சூரிய வெடிப்பை படம் பிடித்து அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மே மாதத்தின் போது சூரியன் இயங்கும் நிலை குறித்து புகைப்படங்களை பதிவு செய்து அனுப்பி உள்ளது. இதில் சூரியனின் காந்த பகுதிகளையும், சூரியப் புள்ளிகளையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது.